யாழ். மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கும் வகையில் கல்லூரியின் ஆயிரத்து 987 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது நிதிப்பங்களிப்புடன் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
இன்று காலை பாடசாலையின் முதல்வர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வில் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்காக தலா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் 12 மணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக சுமார் 1.68 மில்லியன் நிதி குறித்த 1987 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவு மாணவர்களால் பொன். விபுலானந்தன் ஞாபகார்தமாக வழங்கப்பட்டதாக இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்குரிய இணைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரவியலாளருமான வித்தியானந்தநேசன் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் கல்விகற்ற மாணவர்கள் நிதி ஏற்பாடு செய்திருந்தமைக்கு அமைய இந்த புலமைப்பரிச்ல் திட்டம் இன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ர விரிவுரையாளர் விஜயமோகன் மற்றும் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் சொலமன் ஆகியோர் கலந்து சிறப்பித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”