;
Athirady Tamil News

கேரளாவில் முதல் முறையாக கொச்சி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் வெளியேற நள்ளிரவில் தடை விதித்த கோர்ட்டு…!!

0

கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்திற்கு தென்கொரியாவில் இருந்து ஒரு சரக்கு கப்பல் வந்தது.

இந்த சரக்கு கப்பல் துறைமுகத்தில் நின்ற போது கேரளாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று குடிநீர் சப்ளை செய்தது. இதற்காக கப்பல் நிறுவனம் ரூ.2 ½ கோடி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை கப்பல் புறப்படும் முன்பு தந்து விடுவதாக கப்பல் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் கப்பல் நேற்று அதிகாலை குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் துறைமுகத்தில் இருந்து புறப்பட தயாரானது.

இந்த தகவல் கொச்சியில் உள்ள குடிநீர் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது. உடனே அவர்கள் கப்பல் நிறுவனம் மீது கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

துறைமுகத்தில் இருந்து கப்பல் உடனடியாக புறப்படுவதால் அதற்கு முன்பு இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

வழக்கின் அவசர தன்மையை கருதி கேரள ஐகோர்ட்டு நேற்று நள்ளிரவு இந்த மனுவை விசாரித்தது. நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

விசாரணைக்கு பின்னர் குடிநீர் கட்டணம் செலுத்தாத சரக்கு கப்பல், துறைமுகத்தில் இருந்து வெளியேற கோர்ட்டு தடை விதித்தது. இந்த தகவலை உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தெரிவித்து கப்பல் புறப்படுவதை தடுத்து நிறுத்தும்படியும் அறிவுறுத்தியது. கப்பல் நிறுவனம், கட்டண பாக்கியை செலுத்த தவறினால் கப்பலை ஏலம்விடவும் உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், நீதிபதியின் உத்தரவை கொச்சி துறைமுகத்திற்கு தெரிவித்தனர். ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையால் கொச்சி துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள ஐகோர்ட்டு வரலாற்றில் ஒரு வழக்கு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.