பத்ம பூஷன் விருது- குலாம்நபி ஆசாத் மீது காங்கிரஸ் தலைவர் அதிருப்தி…!!
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி, கூகுல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதை குலாம்நபி ஆசாத் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சட்டப்படி பத்மபூஷன் விருது வழங்கப்படுவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். பொது சேவையில் எனக்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் ஆகும் என்றார்.
அதே நேரத்தில் மேற்கு வங்காள முன்னாள் முதல் -மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி பத்ம பூஷன் விருதை நிராகரித்துள்ளார்.
இதற்கிடையே குலாநபி ஆசாத் பத்ம பூஷன் விருது பெறுவதற்கு ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற மேல்சபை காங்கிரஸ் கொறடாவான ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சரியான காரியத்தை அவர் (புத்ததேவ்) செய்துள்ளார். விடுதலை விரும்பி (ஆசாத்). மற்றவரை போல் அடிமையல்ல (குலாம்).
இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்தியில் குலாம் என்றால் அடிமை, ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். குலாம்நபி ஆசாத்தின் பெயரை வைத்தே ஜெய்ராம் ரமேஷ் வார்த்தைகளில் விளையாடி புத்ததேவை பாராட்டவும், குலாம்நபியை விமர்சிக்கவும் செய்துள்ளார்.
அதே நேரத்தில் மற்றொரு காங்கிரஸ் தலைவரான சசிதரூர் இதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட குலாம்நபி ஆசாத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பொது சேவையில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும் என்றார்.
உயரிய பத்ம விருது பெறும் 2-வது காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் ஆவார். 2008-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி மத்திய மந்திரியாக இருந்தபோது பத்மவிபூஷன் விருது பெற்றார். 2019-ல் அவர் பாரத ரத்னா விருதையும் பெற்றிருந்தார்.