புளோரிடாவில் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: காணாமல் போன 38 பேரை தேடும் மீட்புக்குழு…!!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி பகுதியில், அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று அப்பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர், படகு கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர்.
உடனடியாக படகின் அருகில் சென்று பார்த்த போது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்தனர். கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், சனிக்கிழமை இரவு பகாமா தீவில் இருந்து சுமார் 40 பேருடன் அகதிகளை ஏற்றி வந்த படகு, மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இந்நிலையில், படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டிருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 38 பேரை தேடி வருவதாகவும் கூறி உள்ளனர். படகில் இருந்து விழுந்தவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடி உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
அகதிகள் நீண்ட காலமாக பகாமா தீவுகள் வழியாக புளோரிடா மற்றும் அமெரிக்காவிற்கு வருகின்றனர். இதற்காக ஆட்கடத்தல் கும்பல் மூலமாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வருவதால் அடிக்கடி படகுகள் மூழ்கி, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.