கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்…!
அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றபோது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.
அவரை சீன ராணுவம் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சீன ராணுவத்திடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு எதிக்கட்சிகள் உள்ளிட்ட பலரும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்திய ராணுவம், சீன ராணுவத்தை தொடர்புகொண்டு சிறுவனை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. முதலில் சிறுவன் தங்களிடம் இல்லை என மறுத்த சீன ராணுவம், பிறகு சிறுவன் வழித்தவறி அவர்களுடைய பகுதிக்குள் வந்துவிட்டதாக கூறியது.
இந்த நிலையில் இன்று மிரம் தரோனை இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது.
இந்நிலையில் அந்த சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.