’நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் இல்லை’ !!
நாட்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை கிறிஸ்தவ வாலிப பேரவைத் தலைவருமான ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவம் அடிப்படைவாத மதக் குழுவினால் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, “நாட்டில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகின்றது.
“இந்த மத அழிப்புச் சம்பவத்துக்கு உடனடியாக நீதி தேவை என கோட்டாபய ராஜபக்க தலைமையிலான இந்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
“உயர் திரு கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாடானது நியாயமான முறையில் இருக்கின்றது. அவரிடத்திலும் நாங்கள் முறையிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ மத்துக்கு எதிரான தாக்குதல் சம்பவத்துக்கு நீதி வேண்டும் செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.
“2019ஆம் ஆண்டு ஏப்ரல் தாக்குதலின் பின்னர் நாங்கள் பல்வேறு சம்பவங்களை வெளிக்கொணர்ந்துள்ளோம். இதனால் எங்கள் அமைப்பை சேர்ந்த பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு நாட்டில் கிறிஸ்தவவர்களுக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது. இவை மாற்றப்படவேண்டும். இவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொள்வர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம்” என்றார்.