தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் – சுரேஷ் !!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை.
ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.
அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார் அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.
அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோத்தபாய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள்.
கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள்.
மக்களை ஏமாற்றி கோத்தபாய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரச்சாரங்களை நம்ப கூடாது என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
www.athirady.com/tamil-news/news/1526248.html