சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும் – அங்கஜன்!! (படங்கள்)
சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும் – அங்கஜன் இராமநாதன் நேரில் விஜயம்.
சங்குப்பிட்டி பாலத்தின் தொடர்ச்சியான பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஜயம்
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் இன்று (28.01.2022) இடம்பெற்றது.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குமிடையில் இப்பாலத்தின் பராமரிப்புகள் மேற்கொள்ளப்படும் என்ற விதிமுறையின் அடிப்படையில் கடந்த 2011, 2016 ம் ஆண்டுகளில் பராமரிப்பு புனரமைப்புகள் நடந்த நிலையில், கொரோனா நிலமை காரணமாக 2021ம் ஆண்டில் இப்பணிகள் இடம்பெறவில்லை.
இந்நிலையில், இப்பாலத்தின் பராமரிப்பு புனரமைப்பு, பாலத்தை அண்மித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை திருத்தும் பணிகள், மற்றும் A32 வீதியின் பழுதடைந்த இடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் இவ்வாண்டுக்குள் நிறைவுசெய்யுமாறு, அதிகாரிகளிடம் அங்கஜன் இராமநாதன் அறிவுறுத்தினார்.
மேலும், வடக்கின் அழகியல் அடையாளங்களில் ஒன்றான சங்குப்பிட்டி பாலத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது, வீதி அபிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் திரு. குரூஸ், கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொறியியலாளர் திரு. இளங்கீரன், கிளிநொச்சி மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் திரு. மொறீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேவேளை கடந்த 2021ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில், இப்பாலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட துருக்களை சுத்தம்செய்து, வர்ணப்பூச்சிடும் பணிகள் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பணிப்புரையின்பேரில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”