மின் வெட்டு குறித்து மற்றுமொரு அறிவிப்பு!!
திட்டமிட்ட மின் நிலைய திட்டங்களை அமுல்படுத்த முடியாதமையே தற்போதைய மின் நெருக்கடிக்கு பிரதான காரணம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத தெரணவின் பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அடுத்த ஒன்றரை மாதங்களில் மின்வெட்டு தேவையிருக்காது என தெரிவித்தார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் ஏ ஆலை இன்று (29) காலை எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழந்தது.
இதனால், 48 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், இன்று இரவு மின்சாரத் தேவை 2,630 மெகாவோட் ஆக இருக்கும் என இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கிறது.
எனவே, மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோர்களை இலங்கை மின்சார சபை கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார பாவனையை குறைப்பதற்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளது.
“எரிவாயு அடுப்புகள் வெடிக்க தொடங்கியது. மக்கள் எரிவாயு இல்லாமல், மின்சாரத்தைப் பயன்படுத்தி தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளால் தான், எங்களது தேவை அதிகரித்துள்ளது. நமது பிரச்சனையை நாம்தான் தீர்க்க வேண்டும். இந்த வீதி விளக்குகளை இரவு 10 மணிக்கு மேல் அணைக்க வேண்டும் என்று உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களிடம் நேற்றும் தெரிவித்தோம். தங்கள் பெயர்ப்பலகை மின் விளக்குகளை இரவு 9 மணிக்குப் பிறகு அணைக்குமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆதேபோல், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரை மின் பயன்பாட்டைக் குறைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதை எமக்கு சமாளிக்க முடியும்.