கொள்ளையால் “இல்லை” என்கிறார் சம்பிக்க !!
அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இந்த பாவத்தை மென்மேலும் சுமக்காமல் அதற்கெதிராக முன்வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“இல்லை, இல்லை, இல்லை” என்பதற்கு கொள்ளையே பிரதான காரணமாகும் எனத் தெரிவித்த அவர், தட்டுப்பாடுகளுக்கு பஞ்சமே இல்லை என்றார்.
நல்லாட்சியின் ஊழல் ஒழிப்பு குழுவால் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சம்பிக்க ரணவக்க நேற்று (28) வாக்குமூலமளித்தார்.
அதன்பின்னர், அங்கிருந்து வெளியேறும் போதே, ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எம்மை தண்டித்து, எமது ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காக புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இங்கு அழைக்கப்படவில்லை என்பதுதான் இதிலிருக்கும் பெரிய நகைச்சுவையாகும். சட்டமா திணைக்களத்தின் நீதிமன்றத்துக்கு பொறுப்பானவர்கள் இங்கு அழைக்கப்படவில்லை என்றார்.
அன்று இடம்பெற்ற பாரிய டொலர் கொள்ளையின் விளைவையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மின்சாரம் இல்லை, குழந்தைகளுக்கு பால்மா இல்லை. உரம் இல்லை, அத்தியாவசியப் பொருட்கள் இல்லை சமையல் எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை. இவற்றை கொள்வனவு செய்வறத்கு டொலர் இல்லை என தெரிவித்த அவர், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேசிய கொள்ளையால்தான், டொலர் இல்லாமல் போனது என்றார்.
பாரிய அபிவிருத்திகளின் பின்னால் அதிவேக நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், விமானநிலையங்கள் என்பவற்றின் போர்வையில் இடம்பெற்ற பாரிய டொலர் கொள்ளையின் பலனையே நாடு இன்று (28) அனுபவிக்கின்றது.