நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்!!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த இருவரது விடுவிப்பு நேற்றைய தினம் (28) இடம்பெறும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதி மன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வேளை மனுவில் கட்டளை எதுவும் வழங்கப்படவில்லை.
இன்று குறித்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளினால் நகர்த்தல் மனு அனைத்து வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட வேளை, சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடிதம் பொலிசாருக்கு நேற்று (27) மாலை கிடைக்கப்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடிதம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு 25.1.2022 ஆம் திகதி தொலை நகல் மூலம் கிடைக்கப்பெற்று அது வழக்கேட்டில் இணைக்க்பட்டுள்ளதாகவும் அறிய முடிக்கின்றது.
அதன் அடிப்படையில் குறித்த தொலைநகல் வழக்கேட்டில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஜயப்பாடு இருப்பதாக நீதிவான் கருதுவதனால் இந்த வழக்கில் சந்தேக நபர்களுக்கான பிணை தொடர்பாக எந்த கட்டளையும் வழங்கப்படவில்லை.
இவ் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 27 ம், 28 ம், திகதிகளில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி மற்றும் ஜயங்கேனி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களான க.ஷோபனன், யோ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் உருவம் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டதன் பிரகாரம் இவர்கள் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.