;
Athirady Tamil News

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு!!

0

பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 09ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 04.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10ஆம் திகதி மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரிகள், பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

அதேநேரம், பெப்ரவரி 11ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.