பெகாசஸ் விவகாரம்: பாராளுமன்றம், நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது- காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு…!!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தவிட்டது.
இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் மென்பொருளை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்தும் விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது.
இதையடுத்து பெகாசஸ் விவகாரம் குறித்து பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் மத்திய அரசு இதுவரை பொய் கூறி வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதாவது:-
நமது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில், அரசியல்வாதிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப் படைகள், நீதித்துறை என அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டு, உளவு பார்க்கவே பெகாசஸ் மென்பொருளை மோடி அரசு வாங்கியுள்ளது.
இது மிகப்பெரிய தேசத்துரோகம். இதுகுறித்து பாராளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் மோடி அரசு பொய் கூறியுள்ளது. பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம், பெகாசஸ் குறித்து இஸ்ரேலுடன் எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை என கூறியது.
அதன்பின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மறுக்கிறோம் எனவும் தெரிவித்தது.
ஆனால் காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்தே மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்தது. இன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் மோடி அரசின் மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமாகியுள்ளன.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியது.