அரசியல் கைதிகள் 27பேர் விரைவில் விடுவிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் (அரசியல் கைதிகள்) 27பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், தனியார் விடுதியில் அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது’ என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை எனவும், அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
‘பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் முதல் தடவையாக நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்கும் ஆலோசனை குழுவை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் நியமித்தோம்.
இந்தக் குழுவுக்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்தன. அவை ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். கடந்த வெசாக்கின்போதும் 16 பேரை (தமிழ் அரசியல் கைதிகள்) விடுவித்தோம்’ என்றார் நீதி அமைச்சர் அலி சப்ரி.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”