யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் 5 கிலோ மீற்றர் கார்பெற் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்!! (படங்கள்)
‘சௌபாக்கியமான நோக்கு’ கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக வீதி மற்றும் பெருந் தெருக்கள் , வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினுள் அடங்கும் சுமார் 5 கிலோ மீற்றர் வீதி அமைக்கும் பணி அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள 5.1 கிலோ மீற்றர் நீள வீதி அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.பிரபாகரனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஏந்திரி ரி.கே. இளங்கீரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி அ.அற்புதராஜா, தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் திருமதி சிவமதி சிவச்சந்திரன், விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.வசந்தரூபா, யாழ். பல்கலைக்கழக வேலைகள் பொறியியலாளர் ஏந்திரி கே.கடம்பசீலன், நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ் உமேஸ், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
வீதி அபிவிருத்திப் பணிகளைச் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், ஆரம் நிகழ்வை நினைவு கூரும் வகையில் அந்தப் பகுதியில் மர நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”