சிறுமிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்- போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சிறுமிகள் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
காப்பகத்தில் கடந்த 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அன்று மாலை காப்பகத்தில் தங்கி இருந்த 6 சிறுமிகள் திடீரென மாயமானார்கள். இதுபற்றி காப்பக நிர்வாகி கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகளை தேடினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலம் சிறுமிகள் 6 பேரும் ரெயில் நிலையத்திற்கு சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் சிறுமிகள் பெங்களூரு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு போலீசாருக்கு கேரள போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் உதவியுடன் பெங்களூரு மடிவாளா பகுதியில் ஒரு சிறுமி மீட்கப்பட்டார். தொடர்ந்து மற்ற சிறுமிகளும் அப்பகுதியில் உள்ள விடுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
சிறுமிகளை விடுதிக்கு அழைத்துச் சென்றது கொல்லத்தைச் சேர்ந்த டாம் தாமஸ் (வயது 26), கொடுங்கல்லூரைச் சேர்ந்த பெபின்ராபி (26) என தெரிய வந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரும் செவ்வாயூர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்தது. அதன் விவரம் வருமாறு:-
கோழிக்கோடு காப்பகத்தில் இருந்து தப்பிய 6 சிறுமிகளும் ரெயில் நிலையம் சென்றபோது, அங்கு வாலிபர்கள் டாம் தாமஸ், பெபின்ராபி இருவரும் சிறுமிகளிடம் நட்பாக பேசி உள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவும் வாங்கி கொடுத்துள்ளனர்.
பின்னர் சிறுமிகள் பெங்களூரு சென்றதும், மீண்டும் அவர்களை சந்தித்து அவர்கள் தங்க விடுதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அப்போது குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
அப்போது சிறுமி ஒருவரை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த சிறுமி தப்பி வெளியே ஓடி உள்ளார். அப்போதுதான் பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் போலீசாரிடம் சிக்கிய சிறுமி, தனது தோழிகள் பற்றிய விவரத்தை கூற அவர்களும் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து வாலிபர்கள் இருவர் மீதும் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சிறுமிகளை கடத்தி போதைக்கு அடிமையாக்கி அவர்களை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.