சூப்பா் மார்க்கெட்டில் ஒயின் விற்க முடிவு – மகாராஷ்டிரா அரசுக்கு அன்னா ஹசாரே கண்டனம்…!!
மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம். இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனாலும், விவசாயிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் மாநில அரசின் முடிவுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்னா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர அரசு சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்கள், மளிகை கடைகளில் ஒயின் விற்பனையை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. வருவாய்க்காக மட்டும் இதுபோன்ற வழிகளில் மதுவை விற்க அரசு முன்னுரிமை அளிப்பது மாநில மக்களுக்கு துரதிருஷ்டவசமானது ஆகும். மக்கள் போதைக்கு அடிமையானால் அரசுக்கு பரவாயில்லை போல தெரிகிறது. அவர்கள் வருவாய் உயர வேண்டும் என்பதில் தான் குறியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.