அமெரிக்காவில் பனிப்புயல்- 1,400 விமானங்கள் ரத்து…!!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது.
இந்தநிலையில் நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை கெனன் என்கிற பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசியது.
பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 647 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையம், ஜான் எப் கென்னடி விமான நிலையம் மற்றும் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தலா 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் கடும் குளிரில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் சில இடங்களில் 2 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.
பல மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.