இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப்பிடிப்பு.!! (படங்கள், வீடியோ)
பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது.
உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்திய இழுவைப் படகு நேற்று பின்னிரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த சுப்பர்மடம் மீனவர்கள் பருத்தித்துறை மீனவர்களுடன் இணைந்து 9 படகுகளில் சென்று முற்றுகையிட்டனர்.
இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகிலிருந்த வலைகள் மற்றும் மீன்களை கைப்பற்றினர்.
சம்பவத்தையறிந்து அங்கு விரைந்த இலங்கை கடற்படை இந்திய இழுவைப் படகை கையகப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கரை திரும்பிய பருத்தித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”