‘எச்-1 பி’ விசா முன்பதிவு மார்ச் 1-ந்தேதி தொடங்கும்: அமெரிக்கா அறிவிப்பு…!!
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆட்சி காலத்தில் ‘எச்-1 பி’ விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அந்த விசாவை பெற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். எனினும் ஜோ பைடன் அங்கு ஆட்சிக்கு வந்த பிறகு ‘எச்-1 பி’ விசா தொடர்பாக முந்தைய நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார். இதன் மூலம் ‘எச்-1 பி’ விசா பெறும் நடைமுறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் ‘எச்-1 பி’ விசாவை பெறுவதற்கான முன்பதிவு வருகிற மார்ச் 1-ந் தேதி தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அறிவித்துள்ளது. வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் விவரங்கள் மார்ச் 31-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.