கொரோனா விடுமுறையில் 1 செ.மீ. விட்டம் கொண்ட பாட்டிலில் இசைகருவிகளை உருவாக்கிய இளம்பெண்…!!
கேரள மாநிலம், தொடுபுழாவின் கரிங்குன்றம், பாம்பாரையை சேர்ந்தவர் டிபின். ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ஸ்ருதி. பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரள மாநில கூடுதல் திறன் பெறுதல் திட்டத்தின் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
கொரோனா ஊரடங்கின் போது ஸ்ருதிக்கு பாட்டில் கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட பாட்டிலில் களிமண், காகிதம், தெர்மாகோல் மற்றும் ரப்பர் ஆகியவற்றில் டூத் பிக்குகளைப் பயன்படுத்தி சின்ன வடிவங்களை ( மினியேச்சர்களை ) உருவாக்கினார்.
இந்நிலையில் பாட்டில்களுக்குள் இசைக்கருவிகளை உருவாக்க ஆர்வம் கொண்டார். அவர் தனது முதல் மினியேச்சர் இசைக்கருவியை தன்னுடைய அம்மாவுக்காக வாங்கிய இன்சுலின் பாட்டிலில் செய்தார்.
அதன்பின்னர் கொரோனா தடுப்பூசி பாட்டில்களில் இதுபோன்ற கலைப்படைப்புகளை உருவாக்க தொடங்கினார். இன்சுலின் பாட்டிலின் வாய்ப்பகுதி 0.7 மில்லிமீட்டர் தான் இருக்கும்.
எனவே முழுமையாக முடிக்கப்பட்ட படைப்புகளை பாட்டிலினுள் நுழைக்க முடியாது. பாதி வேலையை பாட்டிலின் உள்ளே டூத்பிக் அல்லது ஊசியை வைத்து தான் செய்ய வேண்டும். இதன்மூலம் கிட்டார், தம்புரா, வீணை, தபேலா போன்ற இசை கருவிகளை பாட்டிலுக்குள் உருவாக்கினார்.
இவரது திறமையைக் கண்டு வியந்த இவரது கணவர் இவருக்கு ஊக்கம் அளித்தார். இதனால் ஸ்ருதி தன்னுடைய கலைப்படைப்புகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகளுக்கு அனுப்பி அங்கீகாரம் பெற்றுள்ளார்.
ஸ்ருதி ‘யுனிக் கிராப்ட் ஸ்டூடியோ’ என்ற தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கலைப் படைப்புகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாட்டில் மினியேச்சர்களை ஸ்ருதி உருவாக்கியுள்ளார்.