;
Athirady Tamil News

நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டு வரும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு…!!

0

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்த பட்ஜெட் நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டு வரும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

மக்களுக்கு சாதகமான, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாராட்டுகிறேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது. “அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலைகள்” என்ற கொள்கையை இந்த பட்ஜெட் பின்பற்றுகிறது. பசுமை வேலைகளுக்கான புதிய ஏற்பாடும் இந்த பட்ஜெட்டில் உள்ளது. இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.

நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு ‘பர்வத் மாலா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளுக்கிடையில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இதன் மூலம் எல்லையோர கிராமங்களுக்கு பலம் கிடைக்கும்.

பாஜக என்னை பட்ஜெட் குறித்தும், சுய சார்பு இந்தியா குறித்தும் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனால் நாளை காலை 11 மணிக்கு விரிவாக உரையாற்றுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.