நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு!!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளது. .
தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும், இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு 270 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் மின் தடை ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு பல பிரதேசங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பில் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின்நிலையம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் எந்தச் சிக்கலும் இன்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மின் விநியோகத்தை நிறுத்தி மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ள போதிலும் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி மின்விநியோகத்தைத் தொடர்ந்தும் வழங்கி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார்.