இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரியில் ஜி.எஸ்.டி. வசூல்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்…!!
மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதுபற்றி கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி. முறையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜி.எஸ்.டி. மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 986 கோடி வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவாக வசூலாகி சாதனை படைத்துள்ளது.
பொருளாதாரம் மீண்டு வருவதுதான் இதற்கு காரணம். கொரோனாவையும் மீறி அதிக வசூல் கிடைத்து வருகிறது. 2-வது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடி ஆகும். தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி வருகிறது.
கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.6 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீத வளர்ச்சியை எட்டும்.
தடுப்பூசி போடும் பணியில் ஏற்பட்ட முன்னேற்றத்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் இந்த வளர்ச்சி சாத்தியம் ஆகியுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ், குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதால் பொருளாதாரம் வலிமையாக மீண்டு வருகிறது.