அமெரிக்காவுக்கான பாக்.தூதர் நியமனம் நிறுத்தி வைப்பு…!!!
அமெரிக்காவுக்கான அடுத்த பாகிஸ்தான் தூதராக மசூத்கானை பாகிஸ்தான் அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் மசூத்கான் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அவர் பயங்கரவாதியின் அனுதாபி என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சில எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மசூத்கான் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புதலை வழங்கவில்லை. அவரது நியமனத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது.
மசூத்கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட்பெர்ரி எழுதியுள்ள கடித்தத்தில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக மசூத்கானை நியமித்தது அமெரிக்காவுக்கு மிக மோசமான அவமதிப்பை வெளிப்படுத்துவது என்றே கூற முடியும். மசூத்கான் பயங்கரவாதிகள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹீ தின் உள்பட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை பாராட்டி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் பயங்கரவாதிகளை பின்பற்ற இளைஞர்களை ஊக்குவித்தார். மும்பை தாக்குதலில் 166 பேரை கொன்றதற்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புள்ள ஒரு குழுவுக்கு மசூத்கான் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். இதுபோன்று பல எடுத்துக் காட்டுகள் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.
மசூத்கானின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பதை அமெரிக்கா வெளியுறவுத் துறை நிறுத்தி வைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இது மட்டும் போதாது. அவரது நியமனத்தை நிராகரிக்க வேண்டும். பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் எந்த முயற்சிகளையும் நிராகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.