பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி – சந்தேக நபர்கள் தடுப்பு காவலில்!!
பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உட்பட மூவரிடம் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
நேற்று (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில் தப்பி சென்ற ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு இவ்வாறு கைதாகிய மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த நிலையில் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மேற்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முன்னர் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை மடக்கிபிடிக்க முற்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு கொள்ளை சந்தேக நபர் படுகாயமடைந்த நிலையில் வெள்ளை நிற கார் ஒன்றில் இருந்த பௌத்ததேரர் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகள் உடைத்து சுமார் 30 பவுண் தாலிக் கொடிகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் தொடர் கொள்ளையாக டிசம்பர் 18ம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீதவான் ஒருவரின் வீட்டை உடைத்து 12 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து நீதவான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் ஏனைய கொள்ளை சம்பவங்கள் தொடர்பான கொள்ளையர்களை கைது செய்வதற்காக 4 விசேட பிரிவுகளை கொண்ட பொலிஸ் குழுவினை அமைத்து இந்த கொள்ளையர்களை பொலிசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் காரைதீவு பகுதியில் உள்ள வெட்டுவாய்காலில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக சம்பவதினமான இரவு 10 மணிக்கு இந்த பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.
இதன் போது இரு தேரர்கள் கொள்ளையர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பிரதான கொள்ளையனை நெருங்கி பொலிசார் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.இதன் போது பொலிசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அது குறிதவறி பொலிசார் மடக்கிபிடித்த பிரதான சூத்திரதாரியான கொள்ளையன் மீது பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்ததை கொள்ளை சந்தேக நபர் வீழ்ந்து கிடந்துள்ளார்.ஏனைய சந்தேக நபர்களில் சிலர் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர் 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் படுகாயமடைந்த கொள்ளையன் உட்பட இரு பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட பௌத்த தேர்கள் தமன விகாரையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இந்த கொள்ளையர்களுடன் சேர்ந்து இரு தேரர்கள புதையல் தோண்டும் நடவடிக்கையினை நீண்ட காலமாக ஈடுபட்டுவந்த நிலையில் சம்பவ தினமன்று இரவு கொள்ளையர்களை சந்திப்பதற்காக இருவரும் கார் ஒன்றில் வெட்டுவாய்கால் பகுதிக்கு வந்து காத்திருந்தனர்.
இதன் போது அங்கு பிரதான கொள்ளை சந்தேக நபரும் மற்றும் மட்டக்களப்பைச் சோந்தவரும் திருக்கோவில் திருமணம் முடித்துள்ள மற்றுமொரு சந்தேக நபருமாக இருவரும் மோட்டர்சைக்கிளில் சென்று காத்திருந்து தேரர்களை சந்தித்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது அவர்களை பொலிசார் சுற்றிவளைத்து மடக்கி பிடிக்க முற்பட்டபோது பொலிசார் மீது கொள்ளை சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தேரர்களின் சாரதி ஆகிய இருவரும் தப்பி சென்றுள்ளனர்.
இதில் கொள்ளையரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மற்றுமொரு கொள்ளை சந்தேக நபர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவனுடன் இரு தேரர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்றும் மோட்டர்சைக்கில் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க வருகை தந்துள்ளதுடன் 7 நாட்கள் கைதானவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் கைதாகிய தேரர்கள் 21 மற்றும் 27 வயதினை உடையவர்கள் எனவும் கைப்பற்றப்பட்ட காரில் இருந்து விசேட பிரமுகருக்கான விஐபி ஸ்டிக்கர் உட்பட போதைப்பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.