அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய நிபுணர்களின் உதவி அவசியம்!!
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அலரி மாளிகையில் இன்று (02) பிற்பகல் சந்தித்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனுர்கள் சங்கத்தில் முப்பத்துரெண்டு தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தி 52 தொழிற்சங்கங்கள் காணப்படுவதுடன், அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் துலித் பெரேரா இதன்போது தெரிவித்தார்.
அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாம் மற்றும் அபிவிருத்திக்காக செயற்படுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், நிபுணர்களாக நாட்டிற்காக மேற்கொண்ட உதவிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்பை தொழில் வல்லுனர்கள் சங்கத்திற்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.