நிதியமைச்சரினால் 2022 பட்ஜட் முன்மொழிவுக்கமைய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் பாரிய திட்டம் வவுனியாவில் முன்னெடுப்பு!! (படங்கள்)
‘வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்’ எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியாவின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் சம நேரத்தில் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் இந் நிகழ்வு ஆரம்பமானது.
வவுனியா, பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கிராம அலுவலர் ராகுல் தலைமையில் கிராம அலுவலர் அலுவலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டின் சகல பிரஜைகளினதும், வாழ்வாதாரத்தை பலப்படுத்தி நாட்டை சுபீட்சமாக மாற்றும் இந்தத் திட்டத்துக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ரூ.100 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய கிராமத்துக்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,00,000 அபிவிருத்தித் திட்டங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சிறுகைத்தொழில், வியாபாரம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற் அபிவிருத்திக்கான உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கிராமிய அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வவுனியா பிரதேசசெயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்யோகத்தர் சிவதர்சன் சுபாசினி, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் த.கோகிலரமணி, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பவானி, பண்டாரிகுளம் அபிவிருத்தி உத்யோகத்தர் சங்கீதன், நகரசபை உறுப்பினர் சுமந்திரன், மகளின் அபிவிருத்தி சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுஅமைப்புக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”