கல்வான் தாக்குதலில் சீனாவுக்கு அதிக உயிரிழப்பு – ஆஸ்திரேலிய பத்திரிகை பகீர் தகவல்…!
இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது.
சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனா தனது தரப்பில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கையை அறிவிப்பதில் மவுனம் காத்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீனாவுக்கு இந்தியாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சீனா இதை மறுத்து தங்கள் தரப்பில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் சீனா தெரிவித்த இந்த தகவல் உண்மை இல்லை என்றும், சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் உயிரிழந்தனர் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனாவுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. ‘தி கிளாக்ஷன்’ பத்திரிகை கடந்த 1½ ஆண்டுகளாக ஆய்வு செய்து கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீனா தங்களது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தது. ஆனால் சீனா தெரிவித்த பலி எண்ணிக்கையை விட 9 மடங்கு அதிக உயிரிழப்பை சீனா சந்தித்து இருக்கிறது.
சீன ராணுவ வீரர்கள்
ஆனால் சர்வதேச ஊடகங்களில் கொல்லப்பட்ட தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4 தான் என்று சீனா கூறியது. மோதல் ஏற்பட்ட அன்று இரவு கல்வான் ஆற்றில் சீனாவின் பல ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர்.
நள்ளிரவில் இந்திய வீரர்களுடனான மோதலின் போது சீன வீரர்கள் கடும் குளிரில் உறையும் நிலையில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிச்சென்றனர். அப்போது பல சீன வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்து இருக்கலாம்.
ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக சீனா கூறி உள்ளது. உலகத்தில் சீனா புனையப்பட்ட கதைகளை கூறி உண்மைகளை மறைத்துள்ளது. மோதல் தொடர்பான பல உண்மைகளை சீனா உலகுக்குசொல்லவில்லை.