;
Athirady Tamil News

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி மீது நடவடிக்கை பாய்கிறது…!!

0

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து அனைவரும் வெளியே வந்து விட்டனர்.

முன்னதாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும்போது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள் சிலர் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். சசிகலா ஷாப்பிங் சென்று திரும்பும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, சசிகலா சிறையில் இருந்தபோது, அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என அறிக்கை தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் மன்மோகன் ஆஜராகி, சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு ஆகியோருக்கு எதிராக வழக்கின் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி அளித்து உள்ளது என்றார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.