செல்பி மோகத்தால் விபரீதம்- பாறையில் தவறி விழுந்த வாலிபரை தேடும் பணி தீவிரம்…!!!!
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்து விட்டு வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான ரெட்ராக் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
இந்த பகுதி மலை முகடுகள் நிறைந்த பசுமையான ரம்மியமாக காட்சியளிக்கும் இடமாகும். மேலும் ஆபத்தான பள்ளத்தாக்கு கொண்டது. இந்த பகுதியை கண்டு ரசித்த பின் அவர்கள் அனைவரும் மது குடித்தனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிக்கு சென்று செல்பி எடுத்துள்ளனர். ராம்குமார் பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது அங்கிருந்து தவறி 500 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். மேலும் இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இங்கு கடந்த சில நாட்களாகவே கடும் பனி மூட்டம் நிலவுவதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை வரை தேடிய ஊழியர்கள் இன்று காலையில் மீண்டும் ராம்குமாரின் உடலை தேடும் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இதனிடையே அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால் கொடைக்கானல் வந்த அவர்கள் அங்கு கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து ராம்குமாரின் உடலை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.