;
Athirady Tamil News

ஆங் சான் சூகி மீது 11வது ஊழல் குற்றச்சாட்டு- நிரூபணமானால் 15 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்…!!

0

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், மியான்மர் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது. 76 வயதான ஆங் சான் சூகி மீது, அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் மற்றும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆங் சான் சூகிக்கு எதிராக 11-வது ஊழல் குற்றச்சாட்டை மியான்மர் காவல்துறை பதிவு செய்துள்ளது. லஞ்சம் பெற்றதாக சூகி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும், இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மியான்மரின் குளோபல் நியூ லைட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்து வைத்திருந்தது மற்றும் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சூகிக்கு ஏற்கனவே 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெறுகிறது.

ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது.

ஆங் சான் சூகியின் ஆதரவாளர்களும் மனித உரிமைக் குழுக்களும், அவர் மீதான வழக்குகள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். மேலும், ஆங் சான் சூகி அரசியலுக்குத் திரும்புவதைத் தடுக்கவும், 2023ஆம் ஆண்டுக்குள் ராணுவம் உறுதியளித்த புதிய தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும் திட்டமிடப்பட்டதாக கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.