திருமலையில் அனுமன் பிறந்த இடத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி பூமி பூஜை…!!
திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாசலம் எனப்படும் அஞ்சனாத்திரி மலையில்தான் அனுமனின் தாயான அஞ்சனை தவம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
அனுமன் இந்த மலையில்தான் அவதரித்தார் என்று கருதப்படுவதால் இதனை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் 6 நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து புராணங்களை ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் கல்வெட்டு, புவியியல் மற்றும் அறிவியல் சான்றுகளுடன் அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அஞ்சனாத்திரி மலையில் இந்த மாதம் 16ம் தேதி மகா பௌர்ணமியன்று பூமி பூஜை நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த பூமி பூஜைக்காக புரோகிதர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விசாக சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள், ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்ததேவ் கிரி மகராஜ், சித்ரகூட் சீர் ராமபத்ராச்சாரியுலு, கோடேஸ்வர சர்மா மற்றும் பலரையும் விழாவிற்கு அழைத்துள்ளோம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமன் பிறந்த பகுதி புனித யாத்திரை ஸ்தலமாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.