ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் – சாணக்கியன் கருத்து!!
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (05) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ´ஹபாயா´ சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.
எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.
இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.
இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்