;
Athirady Tamil News

மீனவர்களின் பிரச்சினையில் மூன்றாம் தரப்பொன்று குளிர்காய்கின்றது !!

0

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன், இதற்கு இரு நாடுகளும் இடமளிக்கக்கூடாது. இப்பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என, தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் வடபகுதி மற்றும் இந்தியாவில் தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்துக்கிடையிலான பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், எமது நாட்டு கடல் வளத்தையும், மீனவர்களின் உபகரணங்களையும் அழிப்பதாக வடபகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்திலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். வடக்கிலும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். எனவே, இதனை தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடாக சிலர் பார்க்கின்றனர். எனவே, இவ்விவகாரத்தை நாம் மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். இப்பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்பட்டால் அது பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும். எனவே, இரு நாடுகளும், இணக்கப்பாட்டு அடிப்படையில் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.