வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு இனந்தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரவணை மற்றும் வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு இனந்தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை வேளையில் சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.
கால்நடைகள் மேய்ச்சல் தரவையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்துச் சென்ற இனந்தெரியாத மர்ம நபர்கள் இறைச்சிக்காக வெட்டிவிட்டு கழிவுகளை பற்றைக்குள் வீசிவிட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களால் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”