ஜெய்சங்கருடன் பீரிஸ் கலந்துரையாடல் !!
இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை புதுடெல்லியில் இன்று (07) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கையை வலுப்படுத்துவதற்கான பொருளாதார முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், மீனவர்கள் விவகாரம் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர் பதிவில் இன்று (07) தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதுடன், அதிக இணைப்பின் மூலம் மக்களுடனான மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
நேற்று புதிடெல்லியை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ், இந்த பயணத்தின் போது, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.