பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து கடும் தீர்மானம்!!
ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் தீர்மானங்களை மேற்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு வகையான ஊழல்கள் மற்றும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்தல் அல்லது தாக்குதல் காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து பரிசீலிக்காமல் இருக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு ஊழல் மற்றும் சித்திரவதை மற்றும் கைதிகள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து அத்தியட்சகர்களுக்கும் அறிவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சமாந்தரமாக அனைத்து சிறைச்சாலைகளுக்கும் சென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்டவிரோதச் செயல்கள் குறித்து அறிவிப்பதற்காக 0112 678 600 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.