’கறுப்புப் பணத்தை கொண்டு வருகிறார் கோட்டா’ !!
வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்தாவது,
ஜேர்மனியில் உள்ள எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை தான் நினைத்ததை செய்ய வேண்டும் என ஹிட்லர் செயற்பட்டதைபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட்டு வருவாகக் குறிப்பட்டார்.
ஹிட்லர் போலவே நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறியே ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்தார் என்றும் தற்போது ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் பலரையும் அவர்களுக்கு எதிரான வழக்குகளில் விடுவிப்பதையே ஜனாதிபதி செய்கிறார் எனவும் குற்றஞ்சுமத்தினார்.
தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதையும், வெளிநாடுகளில் உள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதையுமே ஜனாதிபதி செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
வடகொரியாவில் இருந்து கறுப்புப் பணத்தை செலுத்தி ஆயுதங்களை கொண்டுவந்ததாக ஜனாதிபதியின் அருகில் உள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏன் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.
நாட்டில் நடந்துகொண்டிருக்கும் பொருளாதார யுத்தத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர் எனவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாது தங்களது வேலைகளையே இவர்கள் செய்து வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுபோல, பட்டினியால் நாட்டில் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், பெருந்தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 80 ரூபாய்க்கு ஒரு கிலோ மாவை வழங்ன்று சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பேசப்பட வேண்டும். வடக்குக், கிழக்கில் உள்ள மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. மாறாக நாட்டை பிரித்துகொடுக்க வேண்டுமென நாம் கூறவில்லை என்றார்.
தங்களது அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என கூறிக்கொண்டிருக்காமல் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து அவர்கள் விலக வேண்டும் என கூறினார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரைக்கு தொடர்ந்து தடை ஏற்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.