ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.!! (படங்கள்)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டிய குற்றத்திற்காக மூன்று விசைபடகுகளையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும், அதற்கு முன்பாக பிடிக்கப்பட்ட விசைப் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, அத்தோடு எதிர்வருகின்ற 11ம் திகதி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதையடுத்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் தங்களுடைய பகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”