;
Athirady Tamil News

’பிக்பொக்கெட் அடிக்க பார்க்கிறார் பசில்’ !!

0

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 25 சதவீத வரியை அறிவிடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார் எனவும் கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாட்டில் மிகப்பெரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது. இங்கு 3 ட்ரில்லியன் நிதி காணப்படுகிறது. இதனூடாக 250 பில்லியன் இலாபமாகப் பெறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 25 சதவீத வரியை நிதி அமைச்சு அறிவிட உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை நிதி அமைச்சர் பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார். தொழிலாளர்களின் பணத்திலிருந்து பில்லியன் கணக்காணப் பணத்தைப் பெற்று நிதி அமைச்சர் தனக்கு நெருங்கியவர்களை மகிழ்விக்கப்போகிறார் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, EPF, ETF நிதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபத்துக்கு வரியை செலுத்த வேண்டும் வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

எனினும் EPF, ETFக்கு வரியை அறிவிடுவது தவறென தொழில் அமைச்சு கொள்கைரீதியாக முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த முடிவை நாம் சில மாதங்களுக்கு முன்பாகவே இலங்கை வருமான வரித் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரி அறவிடுவதை தொழில் அமைச்சு எதிர்க்கிறது என்றால், நிதி அமைச்சு எவ்வாறு இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரி அறவிடுவதில் இருந்து EPF, ETF நிதியங்களை விடுவிக்க வேண்டும் என சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதனூடாக இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வை காண முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.