விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலி!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.