;
Athirady Tamil News

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை பழுது – பயணிகள் அவதி!! (படங்கள்)

0

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.

மேற்படி பாதையில் கேபிள் அறுந்துபோதல், வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைதல் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது.

எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.

இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது.

ஆனால், தற்போது பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.

அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.

எனவே, பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் இருந்து 5 நிமிடங்களில் பாதையில் ஊர்காவற்துறைக்கு செல்ல கூடியவர்கள் குறித்த பாதை சேவை தடைப்பட்டு இருப்பதனால், காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டும். இதனால் அவர்கள் சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.