குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலை. மருத்துவ பீடத்தை நிர்மாணிக்க ஒப்பந்தம் கைச்சாத்து!!
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
கிழக்கு, தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான நடவடிக்கைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் யூசுப் அல்-படரை உள்ளடக்கிய விஜயம் செய்திருந்த குழுவினர், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்தனர்.
இலங்கையின் திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் ஆகியோர் 2022 பெப்ரவரி 03ஆந் திகதி கொழும்பில் உள்ள நிதி அமைச்சில் வைத்து இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கைச்சாத்திடும் நிகழ்வைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் குழுவினர் அமைச்சர் ராஜபக்ஷவை நிதியமைச்சில் சந்தித்தனர்.
மரியாதை நிமித்தம் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை நினைவுகூர்ந்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், மிகவும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட கட்டுமானத் திட்டமான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட நிர்மாணத்திற்கு நிதியுதவி வழங்கியதற்காக குவைத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். குவைத் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளில் உள்ள தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இளைஞர்களுக்கான தாதியர் மற்றும் சுகாதார உதவித் தொழிலாளர் பயிற்சி வசதி போன்ற இலங்கையிலுள்ள சுகாதாரத் துறையின் ஏனைய முக்கியமான பகுதிகளை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் விளக்கினார்.
இலங்கையின் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான குவைத்தின் ஆதரவையும், நட்புறவின் அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் முன்னேற்றுவதற்கும் நெதல் ஏ.அல்-ஒலாயன் உறுதியளித்தார்.
இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாஃப் பு தைர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்ட அதே வேளையில், வெளிநாட்டு அமைச்சருடனான சந்திப்பின் போது இலங்கை வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.