தமிழ் இனத்துக்காக போராடியவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்!!
இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர், “இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.
அண்மையில், அநுராதபுர சிறைச்சாலையில் துரதிஷ்டவசமானதொரு சம்பவம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குறித்த அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.
ஆனால், அவருக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது.
இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்றுக் கூறவில்லை.
மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.
அவர்களின் வழங்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.
அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும்.
மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும்.
எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.