சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு…!!
சர்வதேச அளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.
இதேபோல், இந்திய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் இன்று 8.92 லட்சத்தில் இருந்து 7.90 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி நேர்மறை விகிதமும் 4.54 சதவீதத்தில் இருந்து 4.44 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:-
வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு இல்லை. தொற்று குறைவால் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயமில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் இருந்தும் இந்தியா நீக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் புறப்படும் 72 மணி நேரத்திற்கு முன்பு, கொரோனா பரிசோதனை சான்றிதழுக்கு பதிலாக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த 2 டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.