;
Athirady Tamil News

சாதி ஏற்ற தாழ்வை நீக்கிய முதல் துறவி ராமானுஜர் – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு…!!

0

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சுவாமி ராமானுஜரின் இந்த பிரம்மாண்டமான சமத்துவத்தின் சிலை, அவரது மறுபிறப்பாக நான் பார்க்கிறேன். எதிர்காலத்தில், இந்த சிலை மூலம், அவரது போதனைகள், இலட்சியங்கள் யுகம், யுகமாக பிரச்சாரம் செய்யப்படும்.

மனித வரலாற்றின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான சுவாமி ராமானுஜர் அவதாரத்தின் ஆயிரமாண்டு கொண்டாட்டத்தில், உங்கள் அனைவருக்கும் கிடைத்த தரிசன வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்பது பெருமையளிக்கிறது.

ராமானுஜர் சிலையை தரிசனம் செய்தார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

நமது நாட்டின் கலாச்சாரம் பன்முகத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இந்து மதத்தில் இருந்து சாதி ஏற்றத்தாழ்வை நீக்கி சமத்துவ செய்தியை வழங்கிய முதல் துறவி ராமானுஜர். மதத்தையும் இந்து துறவி பாரம்பரியத்தையும் சாதியின் பிடியில் இருந்து அவர் விடுவித்தார்.

சமூகத்தில் இருந்த மாறுபாடுகளை அவர் சமநிலைப் படுத்தினார். ஆதி சங்கரருக்குப் பிறகு, சனாதன தர்மத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மகாத்மா ராமானுஜர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் சமத்துவக் கொடியை அசைத்து ஏற்றத்தாழ்வை உடைத்தார். பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் மதம், பக்தி மற்றும் வழிபாட்டின் கதவுகளைத் திறந்தார்.

நாங்கள் இன்று சாதியிலிருந்து விடுபட விரும்புகிறோம், சாதிகளை உடைத்து இணக்கமான இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்க விரும்புகிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் அப்போதைய சமூக ஒழுங்கின் எல்லைக்குள் வாழ்ந்தபோது பக்தியில் சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தினார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

அதனால்தான் ராமானுஜர் இன்றும் பொருத்தமானவர். இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.