பொரளை குண்டு தொடர்பில் சரத் வீரசேகர தகவல் !!
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்வதை யாரும் தவறு என்று கூற முடியாது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை. எனவே பொலிசார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவத்திற்கு உடந்தையானவர்கள் யார் என்பதனை கண்டுபிடித்து அந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேவாலயத்தில் பணிபுரியும் ஒரு தமிழ் நபரை கைது செய்ததற்காக தேவாலயத்தினர் பொலிசார் மீது தவறு காண்கின்றனர்.
உதாரணமாக பொலிசார் அங்கு சென்று விசாரணைகளை நடத்தினர்.
சிசிரீவி காட்சிகளை அவதானித்து விசாரித்த போது அந்த நபர் கைக்குண்டை எடுத்து பலிபீடத்தில் வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதன் பின்னர் வெடிகுண்டு அகற்றப்பட்டது. பின்னர் அவரது அறையை பரிசோதனை செய்த போது வெடிகுண்டை சுற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட செலோ டேப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் அவரை பொலிசார் கைது செய்தனர்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அனைவரும் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். சந்தேகத்தின் பேரில் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளோம்.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்வதை யாரும் தவறு என்று கூற முடியாது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை. எனவே பொலிசார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானதாகும்.” என்றார்.