தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை- மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்…!!
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிடுவதாகவும், அதன்படி 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,71,503 ஆகும்.
இவற்றில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 496 ஆகும்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டடத்தின் கீழ்
2018 முதல் 2020 வரை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல் வசதி, சட்ட ஆலோசனை, உளவியல்-சமூக ஆலோசனை மற்றும் தற்காலிக தங்குமிடம் போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்துகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.