கோவா விடுதலை பெற நேரு சரியான நேரத்தில் தலையிட்டார்: ப.சிதம்பரம்…!!
போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பில் இருந்து கோவாவை விடுவிக்க ராணுவத்தை அனுப்ப நேரு மறுத்து விட்டதாகவும், இதனால் கோவா 15 ஆண்டுகள் தாமதமாக விடுதலை ஆனதாகவும் பிரதமர் மோடி சமீபத்தில் குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அதே குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்தநிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலக வரலாறு பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாது. சுதந்திரத்துக்கு பிந்தைய முதல் 13 ஆண்டுகால வரலாறும் அவர்களுக்கு தெரியாது.
அந்த நேரத்தில், நேரு எவ்வளவு சாமர்த்தியமாக இந்தியாவை அமைதியின் பாதுகாவலன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தினார் என்று அவர்களுக்கு தெரியாது. அணிசேரா நாடுகளின் தலைவராக அவர் உயர்ந்தார்.
கோவா மக்கள் விருப்பத்தை அறிய அவர்களிடமே நேரு கருத்து கணிப்பு நடத்தினார். அதன் அடிப்படையில், கோவாவை விடுவிக்க சரியான நேரத்தில் தலையிட்டார். அதனால் அவரது ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஒரு குரல் கூட எழவில்லை. கோவா இன்று சுதந்திர மாநிலமாக திகழ்வதற்கு நேருவே காரணம்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கின்றனர். ஆனால் நேருவின் பங்களிப்பை கோவா மக்கள் அறிவார்கள்.
கோவாவில், நாளாக நாளாக, பா.ஜனதா, காங்கிரஸ் என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை பிளக்கவே போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்கள், பிற கட்சிகளில் சீட் கிடைக்காததால் கட்சி மாறியவர்கள்தான்.
கோவா மாநிலத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை, தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவால் இழுக்க முடியாது. அந்த அளவுக்கு எங்கள் முகாமை பாதுகாப்பாக வைத்துள்ளோம்.
முகாமுக்கு வெளியே ‘திருடன்’ நின்றாலும், அவனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காதது ஒரு பிரச்சினையே அல்ல. காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.